விரிஞ்சிபுரம் - வழித்துணைநாதர் - பகுதி 2 - சிற்பங்கள்
விரிஞ்சிபுரம் - வழித்துணைநாதர் - பகுதி 1 இல் கோயிலின் அமைப்பைப் பற்றியும், மூல, பரிவார தெய்வச் சிலைகளைப் பற்றியும், தலப் புராணங்களையும், கல்வெட்டுச் செய்திகளையும் பார்த்தோம். இப்பகுதியில் இக்கோயிலின் சிறப்பான சிற்பங்களைப் பற்றிப் பார்க்கலாம். இந்த சிற்பங்கள் விஜயநகர ஆட்சி காலத்தில் வெளி திருச்சுற்றில் எழுப்பப்பட்ட கல்யாண மண்டபங்கள், துவஜஸ்தம்ப மண்டபம், சக்தி மண்டபம் எனும் விடயாற்றி மண்டபம், துவஜாரோகண மண்டபம் ஆகிய மண்டபங்களில் உள்ளன. கல்யாண மண்டபத் தூண்கள் கோயிலின் வெளி திருச்சுற்றில் வடமேற்கு, தென்மேற்கு மூலைகளில் மதிலை ஒட்டி இரு கல்யாண மண்டபங்கள் அமைந்துள்ளன. அவற்றின் திருச்சுற்றை நோக்கிய இரு பக்கங்களின் வெளிவரிசைத் தூண்களின் துணைத் தூண்கள் மிக அழகியன. முன்பக்கம் உள்ள ஆறு தூண்களில் இரு மூலைத் தூண்கள் மூன்று துணைத்தூண்கள் பெற்றுள்ளன. ஒவ்வொரு துணைத்தூணும் சிறு கோயிலைப் போன்ற பாதம் அதன் மேல் அமர்ந்த நிலை சிம்மம், மேலே கபோதம், தூணின் தாங்குதளம், சதுரம், நாகபந்தம், 16 பட்டை கட்டு, தாமரைத் தொங்கல்...