விரிஞ்சிபுரம் - வழித்துணைநாதர் - பகுதி 1 - கோயில் அமைப்பு
சிறப்புகள் எழிலும், நுணுக்கமான வேலைப்பாடுகளும் நிறைந்த தூண்களும், சிற்பங்களும், மற்ற உறுப்புகளும் உடைய மண்டபங்கள் கொண்ட கோயில். தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. (நேரடியாகப் பாடப் பெறாமல் வேற்றூர் அல்லது தனிப் பதிகங்களில் இடம் பெற்று இருப்பது.) 'கண்ணார் நுதலார் கரபுரம்' எனும் அப்பர் பதிகத்தில் உள்ள கரபுரம் இத்தலம். (பள்ளிகொண்டா தான் கரபுரம் எனும் கருத்தும் உள்ளது.) தல புரானங்கள் இத்தலத்தில் சிவசர்மன் என்ற அந்தணச் சிறுவன் இக்கோயில் சிவாச்சாரியார் ஒருவர் மகனாகப் பிறந்தான். ஐந்து வயதில் தந்தையை இழந்த அவனுக்கு கோயில் வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தர மறுத்தனர் தாயாதிகள். தன்னைப் பணிந்த அவன் அன்னையின் கனவில் சிவன் தோன்றி பிரம்ம தீர்த்தத்திற்கு அவனை அழைத்துவரப் பணித்தார். அங்கு வயோதிக ஆசாரியராக வந்து உபநயனம், பிரம்மோபதேசம், சிவ தீட்சை நல்கினார். அவன் தந்தையின் பணியான சிவ வழிபாட்டை செய்ய முற்பட்டான். நெடிய சிவலிங்கத்தின் உச்சி எட்டாது தவிக்க சிவன் தலை குனிந்து வழிபாட்டை ஏற்றார். இக்காரணத்தால் இத்தலம் உபநயனம், பிரம்மோபதேசம் ஆகியவை செய்வித்தற்கு சிறந்த தலமாக கருதப்படுகிறது. (1)...