விரிஞ்சிபுரம் - வழித்துணைநாதர் - பகுதி 1 - கோயில் அமைப்பு

 சிறப்புகள்

  • எழிலும், நுணுக்கமான வேலைப்பாடுகளும் நிறைந்த  தூண்களும், சிற்பங்களும், மற்ற உறுப்புகளும் உடைய மண்டபங்கள் கொண்ட கோயில்.
  • தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று. (நேரடியாகப் பாடப் பெறாமல் வேற்றூர் அல்லது தனிப் பதிகங்களில் இடம் பெற்று இருப்பது.) 'கண்ணார் நுதலார் கரபுரம்' எனும் அப்பர் பதிகத்தில் உள்ள கரபுரம் இத்தலம். (பள்ளிகொண்டா தான் கரபுரம் எனும் கருத்தும் உள்ளது.)

தல புரானங்கள்

இத்தலத்தில் சிவசர்மன் என்ற அந்தணச் சிறுவன் இக்கோயில் சிவாச்சாரியார் ஒருவர் மகனாகப் பிறந்தான். ஐந்து வயதில் தந்தையை இழந்த அவனுக்கு கோயில் வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தர மறுத்தனர் தாயாதிகள். தன்னைப் பணிந்த அவன் அன்னையின் கனவில் சிவன் தோன்றி பிரம்ம தீர்த்தத்திற்கு அவனை அழைத்துவரப் பணித்தார். அங்கு வயோதிக ஆசாரியராக வந்து  உபநயனம், பிரம்மோபதேசம், சிவ தீட்சை நல்கினார். அவன் தந்தையின் பணியான சிவ வழிபாட்டை செய்ய முற்பட்டான். நெடிய சிவலிங்கத்தின் உச்சி எட்டாது தவிக்க சிவன் தலை குனிந்து வழிபாட்டை ஏற்றார். இக்காரணத்தால் இத்தலம் உபநயனம், பிரம்மோபதேசம் ஆகியவை செய்வித்தற்கு சிறந்த தலமாக கருதப்படுகிறது. (1) 

திருவண்ணாமலையில் திருமாலுடனான சிவனது அடிமுடி காணும் போட்டியில் முடியைக் காணாமலேயே கண்டதாகப் பொய்யுரைத்துச் சாபம் பெற்ற நான்முகனே இவ்வாறு அந்தணச் சிறுவனாகப் பிறந்ததாக செவிவழிச் செய்தி.(4) திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து உதித்த நான்முகன் படைப்புத் தொழிலை சிவனிடமிருந்து கற்றார். பின்பு இத்த்லம் வந்து பிரம்மதீர்த்தத்தையும், அதன் கரையில் சிவலிங்கத்தையும் உருவாக்கி வழிபட்டார். (4) விரிஞ்சன் என்னும் நான்முகனது பெயரால் தலப்பெயர் உண்டானது(1). 

தனபாலன் என்னும் வணிகனுக்கு வழித்துணையாக வேடுவனாய்ச்  சென்றதால் வழித்துணைநாதர் (மார்க்க பந்து ஈஸ்வரர்) எனும் திருப்பெயர் பெற்றார். (1)

பார்வதி கௌரியாய் சிவனை வழிபட்ட தலம்.

கரன் என்னும் அசுரன் வழிபட்டதால் கரபுரி என்னும் பெயர். (4)

துந்து என்ற அரக்கனை அழிக்க ஆயிரம் தாமரைகள் கொண்டு வழிபட்ட திருமாலுக்கு ஆழி அளித்தருளிய தலம் (4)

அருணகிரிநாதர் இத்தல முருகனைப் பாடிய திருப்புகழ் பாடல்களில் இவ்வூரை விரிஞ்சி, கரபுரம், கரபுரி என்றும் விளிக்கிறார். (1)

பயணம்

நாள்: விகாரி ஆண்டு ஆவணி மாதம் 10 ஆம் நாள் (27/08/19).  

விரிஞ்சிபுரம் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் வேலூருக்கு 16 கிமி மேற்கே சாலைக்கு வடக்கே பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் இருந்து சுமார் 95 கிமீ தூரம். 

மதில், கோபுரம், விமானம் 

சுமார் 30 அடி உயரமான வெளி மதில். கிழக்கு மேற்காக 385 அடி, வடக்கு தெற்காக 390 அடி நீளம். அதன் மேல் பகுதியில் சிறு சிற்பங்களாலான சட்டக வரிசை ஒன்று மதிலை அழகுபடுத்துகிறது. 'திருவாரூர்த் தேரழகு, மன்னார்குடி மதிலழகு' என்பது சொலவடை. அதுபோன்ற அழகிய மதில் கொண்டது திருவிரிஞ்சை.

மதிலும், சிற்பச் சட்டகங்களும் 

ஒரு சிற்பச் சட்டகம் 

ராஜ கோபுரம் எனப்படும் கிழக்கு கோபுரம் ஏழு நிலைகள் கொண்டது. 110 அடி உயரம், 72 அடி நீளம், 50 அடி அகலம். நுழை வாயில் 12.5 அடி அகலம் உடையது. 

கிழைக் கோபுரம் 

கீழ் நிலை ஈரடுக்கு கல் கட்டுமானம். கீழடுக்குத் தூண்கள், கும்பபஞ்சரம், கோட்டங்கள், முதலியன நுண் வேலைப்பாடுகளுடன் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. கோட்டங்களில் தெய்வத் திருவுருக்கள் எதுவும் இல்லை. தாங்குதளம் உபானம், மகா பத்மம், உருள் குமுதம், கம்புகளும் பாதங்களும் கொண்ட கண்டம், பட்டிகைக்கு பதிலாக கபோதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

கீழ்த் தளம் உள் பக்கமிருந்து 

மேற்குக் கோபுரம் ஐந்து நிலை உடையது. இது கல்லாலான கீழ்த்தளம் மட்டுமே கொண்டிருந்தது. 2007-2010 இல் இதைப் பிரித்து, ஆழமான புதிய அடித்தளத்தின் மீது மீண்டும் எழுப்பி, அதன் மீது செங்கல்லால் மேலும் நான்கு நிலைகள் கட்டி,  ஐந்து நிலை கோபுரமாக இன்றைய தோற்றத்தை அடைந்தது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமையிலான திருப்பணிக்குழு செய்வித்தது.

மேலை கோபுரம் 

வடக்கு மதிலில் உள்ள வாயில் திருமஞ்சன வாயில் எனப்படுகிறது. அங்கு மதில் மேல் ஒரு சிறு கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

வடக்கு திருமஞ்சன கோபுரம் 

தெற்கில் கோபுர வாயில் இல்லை. ஆனால், மதிலழக்குக்காக ஒரு சிறு கோபுரம் வடக்கில் உள்ளதைப் போல மதில் மீது கட்டப்பட்டுள்ளது. தேவர்கள் இவ்வழி வந்து இறைவனை வழிபட்டுச் செல்வதால் மானுடர்க்கு வழி ஏற்படுத்தப்படவில்லையாம். (1) தொன்மையான வி ஐ பி வழி! 

தெற்குப் பொய்கோபுரம் 

கீழைக் கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தால் வெளித் திருச்சுற்று. கோபுரத்தின் எதிரே கொடிமரமும், நந்தியும் உள்ள துவஜஸ்தம்ப மண்டபம். 

கொடிமரமண்டபம் 
(படம் நன்றி: திரு வேலு பிள்ளை)

தெற்கே நான்கு கால் மண்டபமான 'சக்தி மண்டபம்' எனும் 'விடாயாற்றி மண்டபம்'.  அதனை அடுத்து 16 கால் மண்டபமான 'துவஜாரோகண மண்டபம்'. சக்தி மண்டபத்தின் 48 தூண் சிற்பங்களின் (4 தூண்கள், ஒவ்வொரு தூணிலும் மேல் நடு கீழ் என மூன்று சதுரங்கள், ஒவ்வொரு சதுரத்தின் நான்கு பக்கங்களிலுமாக 4 சிற்பங்கள்; 4 x 3 x 4 = 48) ஒன்று விநாயகர். மற்ற 47 உம் சக்தியின் வெவ்வேறு வடிவங்களாக அமைந்திருப்பது தனிச் சிறப்பு.

நாலு கால் சக்தி மண்டபம், பின்னால் சிம்ம தீர்த்தம், துவஜாரோகண மண்டபம்  

நாலு கால் மண்டபத்தை அடுத்துள்ள சிம்ம தீர்த்தம் ஒரு நடபாவி. "நடபாவி' என்பது படியுள்ள கிணறு. 'பாவி' என்றால் தெலுங்கில் கிணறு எனப் பொருள்.  நடபாவியின் நுழைவாயில் சிம்ம முகமாக உள்ளதால் இது சிம்ம தீர்த்தம் எனப்படுகிறது.

சிம்ம தீர்த்தம்
(படம் நன்றி: திரு வேலு பிள்ளை

தென்மேற்கு, வடமேற்கு மூலைகளில் கிழக்கு நோக்கிய இரு  கல்யாண மண்டபங்கள்.

வடமேற்கு கல்யாண மண்டபம் 

வெளித் திருச்சுற்றின் மேற்குப் பகுதியில் ஒரு மணி காட்டும் கல் உள்ளது. அதன் மேல் உள்ள குழியில் ஒரு குச்சியை வைத்தால் அதன் நிழல் விழும் இடம் மணி காட்டும்.

மணி காட்டும் கல் 

அதன் எதிரே சூலி தீர்த்தம் உள்ளது.

சூலி தீர்த்தம் 

வெளித் திருச்சுற்றில் இருந்து ராஜநாராயண வாயில் எனப்படும் கிழக்கு உள் கோபுரம் வழியாக நடு திருச்சுற்றில் நுழையலாம்.

கிழக்கு உள் கோபுரம் 

கோபுரத்தை ஒட்டி உள்புறம் வேணுகோபாலருக்கு ஒரு சிறு கோயிலும் கற் சூலமும் உள்ளன.

வேணுகோபாலர் கோயில் 

கற் சூலம் 

நடுத் திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் உள்ள மண்டபத்தில் அரிய சதாசிவ லிங்கம் ஒன்று உள்ளது.

சதாசிவ லிங்கம்

சதாசிவ லிங்கம் ஐந்து முகங்கள் உடையது. சிவனின் ஐந்து முகங்கள் அவரது ஐந்தொழில்களையும் குறிக்கின்றன.

மேற்கு - சத்தியோஜோதம் - படைத்தல்
வடக்கு - வாமதேவம் - காத்தல்
கிழக்கு - தத்புருஷம் - மறைத்தல்
தெற்கு - அகோரம் - அழித்தல்
மேல் - ஈசானம் - அருளல்

நடுத் திருச்சுற்றின் வடக்குப் பகுதியில் உள் மதிலை ஒட்டி இரு பனைகள். இவை தல மரங்கள். ஓராண்டு கறுப்பாகவும் மறு ஆண்டு வெள்ளையாகவும் இவற்றின் பனங்காய்கள் இருக்குமாம்.

தலப்பனைகள்
பின்புலத்தில் கிழக்கு கோபுரம், உள் கோபுரம், வட கிழக்குக் கல்யாண மண்டபம் ஆகியவை தெரிகின்றன. 

பனைகள் பக்கத்தில் சோம தீர்த்தக் கிணறும் ஒரு கல் தொட்டியும் உள்ளன.

சோம தீர்த்தம், கல் தொட்டி 

நடு திருச்சுற்றில் வடமேற்குப்  பகுதியில் மரகதவல்லி அம்மன் திருமுன் உள்ளது.

மரகதவல்லி திருமுன் முன் மண்டபம் - கொடிமரம, சிம்ம வாகனம் 

மரகதவல்லி அம்மன் திருமுன்னும் திருச்சுற்றும் 

அம்மன் சன்னிதி விமானத்தின் மேற்பகுதி
(படம் நன்றி: திரு வேலு பிள்ளை)

அம்மன் சந்நிதிக்கு கிழக்கே நடராஜர் மண்டபம். வடகிழக்கு மூலையில் நவகிரகங்கள். அதன் பக்கத்தில் சனி, பைரவர், சூரியன் சிலைகள்


சனி, காக்கை வாகனத்துடன்

பைரவர் நாயுடன்


உள் திருசுற்று

வழித்துணைநாதர் சன்னிதி

வழித்துணைநாதர் திருமுன் விமானம் U வடிவ தூங்கானை (தூங்கு = உயர்ந்த) என்னும் கஜபிருஷ்ட விமானம். கஜம் - யானை, பிருஷ்டம் - புட்டம். இவ்வகை விமானம் மேலிருந்து பறவைப் பார்வையாகப் பார்த்தால் லிங்க வடிவில் தெரியும். பாதபந்த அதிஷ்டானம் கொண்டது. இடைநாழி, அர்த்த மண்டபம், மகாமண்டபம் உடையதாக உள்ளது.

தூங்கானை விமானம் 

விமானத்தின் மேல்பகுதி

கருவறை, அர்த்த மண்டபப் பரிவாரத் தெய்வங்கள்:

விநாயகர் 

தட்சிணாமூர்த்தி

பெருமாள்

துர்க்கை 

கருவறையைச் சுற்றி உள் திருச்சுற்று அமைந்துள்ளது. இடையில் அகழி அமைப்பு.

உள் திருச்சுற்று 

சப்தகன்னியர்

சப்த கன்னியர் 

வழித்துணைநாதர் சற்றே சாய்ந்துள்ள உயரமான தான்தோன்றி (சுயம்பு) லிங்கமாய் அருள் பாலிக்கிறார்.

வழிபட்டவர்கள் 

பட்டினத்தார் இவ்விறைவனை வழிபட்டுள்ளார். அருணகிரிநாதர் இவ்வூர் முருகனைப் பாடியுள்ளார். அப்பய்ய தீட்சிதர் இங்கு பிறந்தவர் ஆவார்.

கல்வெட்டுகள் (1)

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில் அவனது பிரதிநிதி இங்கு அரசாண்டதாகத் தெரிகிறது. இவ்வூர் கல்வெட்டுகளில் 'ஜயங்கொண்ட சோழ மண்டலத்து திருவிரிஞ்சிபுரம்'  என அழைக்கப்படுகிறது. 
  • இரண்டாம் நந்தி வர்ம பல்லவன் (பொ. ஆ. 731 - 796), 
  • பராந்தக சோழன் (பொ. ஆ. 907 955)
  • சுந்தர சோழன் (பொ. ஆ. 957 - 970) 
  • இரண்டாம் ராஜேந்திர சோழன் (பொ. ஆ. 1051 - 1063)
  • 3 ஆம் குலோத்துங்க சோழன் (பொ. ஆ. 1178-1218)
  • 3 ஆம் ராஜராஜன் (பொ. ஆ. 1216 - 1256)
  • கோப்பெருஞ்சிங்கன் (பொ. ஆ. 13 ஆம் நூற்றாண்டு)
  • விஜயகண்ட கோபாலன் (பொ. ஆ. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)
  • மாறவர்மன் குலசேகர பாண்டியன் (பொ. ஆ. 1268 - 1318)
  • சடையவர்மன் சுந்தர பாண்டியன் (பொ. ஆ. 1303 - 1317)
  • மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் (பொ. ஆ. 1297 - 1342)
  • ராஜநாராயண சம்புவராயர், 
  • அச்சுத ராயர், 
  • தேவராயர், 
  • கிருஷ்ணதேவராயர், 
  • இம்முடி நரசிம்ம ராயர், 
  • கர்நாடக வேங்கடபதி தேவன் 
ஆகிய மன்னர்களால் திருப்பணி நடந்துள்ளது. 

சகம் 1418 இல் இம்முடி நரசிம்மராயர் காலத்தில் எர்ரம நாயக்கர் ஒரு மண்டபத்தை காட்டியுள்ளார். துவஜஸ்தம்ப மண்டபத்தில் உள்ள விநாயகர் ஸ்ரீ எர்ரம விநாயகர் என்று வணங்கப்படுகிறார். 

மேற்கு கோபுரவாயிலில் உள்ள சூரியன், பிறை நிலா, வாள் , வராகச் சின்னங்கள் மன்னர் ஆட்சியைக் குறிக்கின்றன.

ஒரு கல்வெட்டு எல்லா வகுப்பு அந்தணர்களும் கோயில் சந்நிதியில் கூடி திருமணம் செய்து கொளவதற்கு வரதட்சிணை கொள்வதோ கொடுப்பதோ கூடாது என்று முடிவெடுத்து, அதை அரசன் ஆமோதித்து மீறினால் தண்டனையும் ஏற்படுத்தியுள்ளான்.

மற்ற கல்வெட்டுகள் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானங்களைப்பற்றி தெரிவிக்கின்றன.

இக்கோயிலின் அழகிய சிற்பங்களை பற்றி அடுத்த பாகத்தில் காணலாம்:




நன்றிக்கடன்

1. திருவிரிஞ்சிபுரம் அருள்மிகு மார்க்கபந்தீஸ்வரர் கோயில் (ஸ்ரீ வழித்துணைநாதர்) ஸ்தல வரலாற்றுத் தொகுப்பு விசேஷங்கள்; நான்காம் பதிப்பு; 1980 - http://www.virinjipuramsivantemple.com/oldbook1980.pdf

2. 2008 ஆம் ஆண்டு புகைப்படத் தொகுப்பைக் காண:
https://www.flickr.com/photos/rajushanthi/albums/72157605316728624/with/2533991754/

3. புதுயுகம் - https://www.youtube.com/watch?v=lV_LgnAGlmg

4. பொய்கை வெ. ஆனந்த சுந்தரராஜன்; விரிஞ்சிபுரம் அருள்மிகு வழித்துணைநாதர் திருக்கோயில் வரலாறு; முதல் பதிப்பு; 2022



Comments

Popular posts from this blog

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்

கண்ணகியின் அடிச்சுவட்டில் - சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்