தக்கோலம்

 ஊர் அமைவிடம்


தக்கோலம் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டத்திலிருக்கும் ஒரு ஊர். அரக்கோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 64 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.  கொற்றலை, கல்லாறு என்னும் பழம் பெயர்களுடைய் குசத்தலை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆறு பூண்டி ஏரி வழியாக சென்னையின் வடக்கில் கடலில் கலக்கிறது.

ஊர்ப் பெயர்

தக்கோலம் என்பது தற்காலப் பெயர். திருவூறல் என்பது கல்வெட்டு, தேவாரத்தில் உள்ள பழம் பெயர். இத்தல இறைவனின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் (திருவூறல்) இப்பெயர்.

வரலாறு - தக்கோலப் போர்

இவ்வூர் அங்கு கி.பி. 949 ஆம் ஆண்டு நடந்த ஒரு போரினால் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. அந்தப் போரில் பராந்தக சோழனின் மகன் ராஜாதித்தன் தலைமையிலான  சோழர் படையும் இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் என்ற கன்னர தேவனின் தலைமையிலான ராட்டிரகூடர் படையும் மோதின. இப்போரில் சோழர்களுடன் சேரர்களும்,  ராட்டிரகூடர்களுடன் கங்கர்களும் துணை நின்றனர். கன்னரதேவனின் மைத்துனன் கங்க மன்னன் இரண்டாம் பூதுகன் அம்பினால் ராஜாதித்தரைக் கொன்றான். இதனால் சோழர் படை தோல்வியுற்றது.

ஜலநாதீஸ்வரர் கோயில் 
  • பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர்,  சுந்தரர் பாடியது. 
  • திருமூலர், சேரமான் பெருமாள் நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் ஆகியோரும் பாடியுள்ளனர்.

தல வரலாறு

1. தீர்க்கதா முனிவரின் சாபம் போக்கியது

பிருஹஸ்பதி தேவர்களின் குரு. அவர் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. தீர்க்கதா ஒரு முறை பெரும் யாகம் ஒன்றை செய்து  கொண்டிருந்தார். அங்கு வந்த காமதேனுவை அங்கே தங்கி யாகத்திற்கு  உதவ வேண்டினார்.  காமதேனு இந்திரன் அனுமதி இன்றி அங்கே தங்க மறுத்தது. தீர்க்கதா அதைக் கட்டிப் போட முயன்றார். காமதேனு அவரை சபித்தது. சாபத்தில் இருந்து விடுபெற அவர் தந்தை உத்தி முனிவர் நாரதரின் ஆலோசனையை நாடினார். நாரதர் வழிகாட்டுதலின்படி தீர்க்கதா தக்கோலம் வந்து நந்தியை வழிபட்டு, நந்தியின் வாயில் இருந்து கங்கையை வரவழைத்து அந்த புனித நீர்கொண்டு சிவனை வழிபட்டார். சாபத்தில் இருந்து விடுபட்டார். இந்நிகழ்வால் இத்தலம் திருவூறல் என்றும் இறைவன் ஜலநாதேசுவரர் என்றும் பெயர் சூடினர்.

2. தக்கன் தலையைக் கொய்தது. 

தக்கனின் யாகத்தை அழித்து அவனை வீரபத்திரர் கொன்ற தலம் இதுவே என்றும் அப்போது தக்கன் ஓலமிட்டதைக் குறிக்கும் வகையில் தக்கோலம் எனும் பெயர் பெற்றது என்றும் ஒரு கதை உண்டு.

மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் 1543 ஆம் ஆண்டு விஜயநகர மன்னர் சதாசிவராயரால் அமைக்கப்பட்டது. இரு பிரகாரங்கள். மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் வடக்கு நோக்கியும், மகாமண்டப வாயில் தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

ராஜகோபுரம்

லிங்கம் உத்தராயண காலத்தில் இளம் சிகப்பு நிறத்திலும் தட்சிணாயன காலத்தில் வெள்ளை நிறத்திலும் காட்சிதருகிறது. மணலால் செய்த சுயம்புலிங்கம் என்பதால் இவருக்கு மஞ்சள் காப்பு மட்டுமே - தீண்டாத் திருமேனி . 

வாயிற்காவலர்களும் கருவறையும்

தேவகோட்ட சிற்பங்கள்

இங்குள்ள தேவகோட்ட சிற்பங்கள் சிறப்பு வாய்ந்தவை.

விநாயகர்
(படம் நன்றி: https://tamilnadu-favtourism.blogspot.com/2017/09/jalanatheeswarar-temple-thakkolam-temple.html


தட்சிணாமூர்த்தி
(படம் நன்றி: http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=1750&id1=50&id2=18&issue=20130629)
வேறங்கும் இல்லா திருக்கோலம். சிறப்பு: உத்குடிகாசனத்தில் அமர்ந்திருப்பது.
வலது பின் கையில் அக்க மாலை, முன் கையில் கடக ஹஸ்தம் - மலர்?
இடதுபுறம் சாய்ந்த தலை, ஜடாமண்டல தலைக்கோலம்
இடது பின் கையில் தீப்பந்தம், முன் கையில் சுவடி
கீழே நாகமும் இரு மான்களும்; முயலகன் இல்லை.

திருமால்
(படம் நன்றி: விஜய் பட்)
சிறப்பு: சுகாசனமாக அமர்ந்த கோலத்தில் இருக்கும் தேவகோட்ட திருமால்)

நான்முகன்
சிறப்பு: சுகாசனமாக அமர்ந்த கோலத்தில்  தேவகோட்டத்தில் இருப்பது

துர்க்கையின் எழில் மிகு கோட்டச் சிற்பம் - திரிபங்க  (மூன்று வளைவுகள்) உடலமைதி, ஸ்வஸ்திக நிலை (குறுக்குக் கால்); 

மற்ற சிற்பங்கள்

10 கை விநாயகர் வல்லபை உடன்

ஐயனார்

பிரநாளம் பூதகண வடிவில்


வலபியில் விநாயகரும் பூதங்களும்

மற்ற சிறப்புகள்
  • இத்தலத்தில் அம்மன் கிரிராஜ கன்னிகாம்பாள் வடக்கு நோக்கியிருக்கிறாள். அதனால் மிகவும் சக்தி உள்ளவள் என்பது நம்பிக்கை. இங்கு அம்மனுக்கு தான் முதல் பூஜை.  அம்மனை தரிசித்து விட்டுதான் சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.
  • அருணகிரிநாதர் இக்கோயில் முருகனைப் பாடியுள்ளார். 



Comments

Popular posts from this blog

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்

கண்ணகியின் அடிச்சுவட்டில் - சாயாவனம் சாயவனேசுவரர் கோயில்