சென்னை - மாங்காடு வெள்ளீசுவரர் கோயில்

 சென்ற நாள்: 18/03/2022

இடம்

சென்னை மாங்காடு. பழமையான ஊர். சங்க கால கருப்பு சிகப்பு மட்கலங்களும், பானை ஓடுகளும், முதுமக்கள் தாழிகளும் இங்கு கிடைத்துள்ளன. 

பழம் பெயர்

  • பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் கால உதயேந்திரம் செப்பேட்டில் இவ்வூரின் பெயர் 'சூதவனம்' என்றுள்ளது. சூதம் = மாமரம். 
  • வடமொழியில் 'ஆம்ராண்யம்', தமிழில் 'மாவை' என்னும் பெயர்களும் உண்டு. 
  • பல்லவர் கல்வெட்டுகளில் 'மாங்காடு'
  • சோழர் கல்வெட்டுகளில் 'ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து குலோத்துங்க சோழ வளநாடு என்னும் புலியூர் கோட்டத்தில் அழகிய சோழநல்லூர்'. (சுந்தர சோழன் பெயரால இப்பெயர் அமைந்திருக்கலாம்).

காலம்

மூன்றாம் நந்திவர்மன் (பொ. ஆ. 844 - 866) காலத்தில் செங்கற்தளியாக எடுப்பிக்கப்பட்டு,  சோழர்களால் (?10 ஆம் நூற்றாண்டு) கற்றளியாக புனரமைக்கப்பட்டது.

கல்வெட்டுகளில் இறைவன் பெயர்
  • மூன்றாம் நந்திவர்மன் 17 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு - கருவறையின் தரை
  • அபராஜித வர்மன் (பொ. ஆ. 879-897) கல்வெட்டு ஒன்று.
  • மூன்றாம் ராஜராஜன் (பொ.ஆ. 1146-1173) கல்வெட்டு இரண்டு
  • விஜயநகர மன்னன் இரண்டாம் தேவராயன் (பொ. ஆ. 1422-1446) தம்பி பிரதாப தேவராயன் கல்வெட்டு ஒன்று.
இந்த ஐந்து கல்வெட்டுகளிலும் இறைவன் பெயர் 'திருவெள்ளிக்கீழ்மேய நாயனார்', 'மகாதேவர்', வல்லீசுவரர்' என்றுள்ளது. வெள்ளி சுக்கிரனைக் குறிக்கும். தலபுராணத்தோடு தொடர்புடையது. 1100 ஆண்டுகளாக இறைவன் பெயர் மாறாதிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் ம்யிலாப்பூரிலும் ஒரு கோயில் உள்ளது.

தல புராணம்

வாமனருக்கு மகாபலி மூன்று அடி நிலத்தை தானம் செய்வதைத் தடுக்க முயன்று அசுரகுரு சுக்கிராச்சாரியார் ஒரு கண்ணை இழந்தார். இழந்த கண்ணை மீண்டும் பெறும் பொருட்டு அவர் இங்கு சிவனை நோக்கித் தவம் செய்தார். சிவன் சுக்கிராச்சாரியாருக்கு அருள் செய்தான். அதனால், இறைவன் சுக்கிரனோடு (வெள்ளி) தொடர்புடைய பெயர் பெற்றார்.

பார்வதி சிவன் கண்களை விளையாட்டாக மூடி அண்டங்கள் இருண்டன. அந்த தவறுக்கு பிழையீடாக பார்வதி இங்கு வந்து தவம் செய்தாள். சிவன் பார்வதியை காஞ்சிபுரம் சென்று தவத்தைத் தொடரச் சொன்னார். மாங்காடு காமாட்சியே இத்தல சிவனது துணைவி. எனவே, இக்கோயிலில் அம்மன் சந்நிதி இல்லை.

கோயில் அமைப்பு

கோபுரம் இல்லை. கிழக்கு நோக்கிய வாயில்.

வாயில்

அழகிய அமைதி நிலவும் மரங்கள் நிறைந்த கோயில் வளாகம். 

விமானம்

விமானம்

வகை
  • மூன்று தலம். 
  • தரைத்தலம் கல்லாலும் மேற்பகுதிகள் செங்கல் சுதையாலும் ஆன மிஸ்ர விமானம்.
  • நிராந்தரம் (ஓற்றைச் சுவர்)
  • கிரீவமும் சிகரமும் எட்டு பக்கம், கீழே நான்கு பக்கம் கொண்ட கலப்பு திராவிட விமானம்
தரைத் தலம்

தரைத்தலம் மேற்குப்பகுதி
1. கர்ண பத்தி; 2. சாலை; 3. நிஷ்கராந்த பஞ்சரம்

அதிஷ்டானம்

பாதபந்த அதிஷ்டானம். உபானம் பத்மம் பெற்றுள்ளது. உபபீடம் இல்லை. நிஷ்கராந்த பஞ்சரங்கள் மட்டும் ஷடாங்க உபபீடமும், பிரதிபந்த அதிஷ்டானமும் கொண்டுள்ளன 

பித்தி

பித்தியில் நடு சாலைப் பத்தியும் (2), இரு கர்ண பத்திகயும் (1) உள்ளன. சாலைப் பத்தி மட்டும் பத்ரமாய் முன் நீண்டுள்ளது. சாலை, கர்ண பத்திகளுக்கு இடையே பஞ்சரப் பத்திக்குப் பதிலாக இரு  நிஷ்கராந்த பஞ்சரங்கள் (3) உள்ளன. அவற்றின் மேல் உள்ள நாசிகளின் ஆறு அங்க விமானங்கள் உள்ளன. சாலைகளில் தேவ கோட்டங்கள் உள்ளன.

தூண்கள்

பிரம்ம காந்த 4 பட்டைத் தூண்கள். மாலைத் தொங்கல், தமரைக்கட்டு, கலசம், தாடி, கும்பம், பாலி மண்டி, பலகை, வீர கண்டம் ஆகிய உறுப்புகளைக் கொண்டுள்ளது. தூணின் உடலில் சிற்பங்கள், வேலைப்பாடுகள் இல்லை. 
வெட்டுப் போதிகை

தேவ கோட்டங்கள்

தெற்கு: தட்சிணாமூர்த்தி

இரு பக்கங்களில் இரு முனிவர்கள் சிற்பங்கள்
மரத்தில் பொந்தில் ஆந்தையும், விபூதிப் பையும் உள்ளன.
முயலகன் வழக்கத்துக்கு மாறாக வலது புறம் தலை வைத்துள்ளான்
(படம்: நன்றி: தினமலர்)

மேற்கு: லிங்கோத்பவர்
மேலே அன்னத்துடன் தாழம்பூவும் உள்ளது.
பக்கங்களில் திருமாலும், பிரம்மாவும் கைகூப்பி வணங்கி அமர்ந்துள்ளனர்

வடக்கு: பிரம்மா
பக்கத் தலைகள் இரண்டும் சிறியன, கிரீடங்கள் இன்றி உள்ளன.


துர்க்கை
துர்க்கையிடம் பிரயோக சக்கரம் உள்ளது. இது அரிது.

பிரஸ்தரம்

வேலைப்பாடுகள் அற்ற உத்தரம், வாஜனம், வலபி. கபோத நாசிகளின் காடங்களில் மனிதத் தலைகள் உள்ளன. சோழர் பாணி வியாழ வரி கபோதத்தின் மீது உள்ளது.

பிரஸ்தரம்
1. நிஷ்கராந்த பஞ்சரத்தின் நாசி உள்ளே 6 அங்க கோயில்; 2. நாசி; 3. வியாழ வரி

இரண்டாம் மூன்றாம் தளங்கள்

கீழ் இரண்டு தலங்கள் மீது ஹாரங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் இரு கர்ணக்கூடுகளும் ஒரு சாலையும் உள்ளன.  பஞ்சரம் இல்லை. இடைப்பட்ட ஹாராந்தரத்தில் நாசிக் கோட்டம் உள்ளது.

விமான மேல் பகுதி - மேற்குப் பக்கம் - 2,3 ஆம் தலங்கள்
அ - இரண்டாம் தலம்; ஆ - மூன்றாம் தலம்; இ - கிரீவம்; ஈ - சிகரம்
1 - கர்ணக்கூடு; 2 - சாலை; 5 - பாரம் தாங்கி

சுதைச் சிற்பங்கள்

2, 3 ஆம் தலம், கிரீவத்தை சுதைச் சிற்பங்கள் அலங்கரிக்கிறன. 
  • நான்கு பக்கங்களிலும் சாலைகளின் இரு பக்கங்களிலும் பாரம் தாங்கி தம்பதிகள் உள்ளனர்.
  • கீழ் கர்ண கூடங்களில் திசைக் காவலர்கள் சிற்பங்கள் உள்ளன.
  • மேற்குப் பக்கம் - சாலைகளில் திருமால் கிடந்த நிலையிலும், நின்ற நிலையிலும், கிரீவத்தில் இருந்த நிலையிலும் உள்ளார். கீழ் கர்ண கூடங்களில் வருணன், நிருத்தி; மேல் ஹாரத்தில் வராக, நரசிம்ம, ராம அவதாரங்கள் உள்ளன. கீழ் ஹாரத்தில் வெங்கடாசலபதி உள்ளார். மேல் ஹாரத்தில் லிங்கோத்பவர் சிற்பம் உள்ளது.
தெற்குப்பக்கம்

  • தெற்குப் பக்கத்தில் சாலைகளில் தட்சிணாமூர்த்தி, வீணாதர தட்சிணாமூர்த்தி; கீழ் கர்ண கூடங்களில் எமன், அக்னி; மற்ற இடங்களில் நடராஜர், ஊர்த்துவ தாண்டவர், பிச்சாடனர், கால சம்ஹார மூர்த்தி, அர்த்தநாரீசுவரர், முருகன் சிவனுக்கு பிரணவ பொருளுரைப்பது
  • வடக்குப் பக்கத்தில் சாலைகளில் பிரம்மா; கீழ் கர்ண கூடங்களில் குபேரன், வாயு; மற்ற இடங்களில் சிவனது உருவங்கள் - ஏக பாத மூர்த்தி, ஏக பாத திரி மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி, பைரவர், சதாசிவர்.

வடக்குப் பக்கம்

  • கிழக்குப் பக்கத்தில் கீழ் கர்ண கூடங்களில் இந்திரன், ஈசானன்; மீனாட்சி கல்யாண சுந்தரர், விநாயகர், முருகர் 
கிழக்கு பக்கம்.

கிரீவம், சிகரம் ஸ்தூபி

மேல் தலத்தின் மேல் மூலைகளில் கணங்களும் அவற்றின் இருபுறம் நந்திகளும் உள்ளன. சிகரத்தை நான்கு பக்கங்களில் பாரம் தூக்கிகள் தாங்குகின்றனர். கிரீவ கோட்டங்களில் கிழக்கில் சிவன், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் திருமால், வடக்கில் பிரம்மா அமர்ந்த நிலையில் உள்ளனர். எட்டு பட்டை சிகரத்தில் எட்டு மகா நாசிகள்.

அர்த்த மண்டபம், மகா மண்டபம்

கருவறையின் முன் சதுர வடிவமுள்ள, தூண்கள் அற்ற அர்த்த மண்டபம் உள்ளது. 

அர்த்த மண்டப வெளிச்சுவரில் ஒற்றைக்கால் பஞ்சரம்

மகா மண்டபம் சோழர் காலத் தூண்கள் கொண்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் வாயிலில் வாயிற் காவலர் சிற்பங்கள் இல்லை. பதிலாக மாங்கனி விநாயகர், மயில் மீது தேவியருடனான முருகர் சிலைகள் உள்ளன.

மகா மண்டப விநாயகர்
இடது முன் கையில் மாங்கனி, பின் கையில் நெற்கதிர்
(படம் நன்றி: தினமலர்)

மகா மண்டபத்தின் கிழக்குச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது. அதற்கு வெளியே காமாட்சி திருவடியும், பின்னால் ஒரு மண்டபத்தில் நந்தியும் உள்ளன. அதன் பின் பலி பீடம்.

திருச்சுற்றில் மற்ற சந்நிதிகள்

திருச்சுற்றில் வீரபத்திரர், சுக்ரேசுவரர் சந்நிதிகள் உள்ளன.

வீரபத்திரர்
காலடியில் ஆட்டுதலை தட்சன்
(படம் நன்றி: தினமலர்)


துணை:

மா. சந்திரமூர்த்தி; மாங்காடு வெள்ளீசுவரர் திருக்கோயில்; காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத் தடயங்கள்;முதல் பதிப்பு; 2015

தினமலர் கோயில்கள்: https://temple.dinamalar.com/New.php?id=445













Comments

Popular posts from this blog

ஸ்ரீமுஷ்ணம் பூவராகர் கோயில் புருஷசூக்த மண்டபம்

சென்னை போரூர் ராமநாதீசுவரர் கோயில்

திருக்கோழம்பியம் கோகிலேஸ்வரர் கோயில் (கோழம்பநாதர் கோயில்)