சாயாவனம்
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே சாயாவனம் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் சுமார் 20 கி.மீ தொலைவு. திருவெண்காட்டில் இருந்து 3 கிமீ. ஆற்றுப்படை வழிநடத்திய 'கண்ணகியின் அடிச்சுவட்டில்' பயணத்தின்போது முதல் நாள் (29/04/2026) காலை கண்ட இடங்களில் ஒன்று.
சாயாவனேசுவரர் கோயில்
- இறைவன்: சாயாவனேஸ்வரர், இரத்தினச் சாயாவனேஸ்வரர் - சுயம்பு லிங்கம். சதுர ஆவுடையார்
- இறைவி: குயிலினும் நன்மொழியம்மை / கோசகாம்பாள்
- தல மரம்: கோரைப் புல் (பைஞ்சாய்)
- தீர்த்தம்: காவிரி, ஐராவத தீர்த்தம்
 |
| சாயாவனேஸ்வரர் கோயில் கோபுரம் அருகில் திருக்குளம் - ஐராவதத் தீர்த்தம் |
 |
| மூன்று நிலை கோபுரம். குடமுழுக்கிற்காக வேலைகள் |
 |
| கோபுரத்தின் முன்புரம் - அமைதியான பரந்த வளாகம் |
 |
| கோபுரத்தின் வடக்கில் |
தலச் சிறப்புகள்
- தேவாரப் பாடல் பெற்ற தலம்
- வில்லேந்திய வேலவர்
- கோரைப்புல்லைத் தலமரமாகக் கொண்ட ஒரே தலம்,
- 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் முக்தியடைந்த தலம்.
- மாடக்கோயில்
- காசிக்கு சமமாகக் கருதப்படும் ஆறு காவிரிக் கரை தலங்களில் ஒன்று.
- பஞ்சவனத் தலங்களுள் ஒன்று.
- கோயில் திருச்சுற்றில் பஞ்சபூத லிங்கங்களுக்கும் தனித்தனி சன்னிதிகள்.
பாடல் பெற்ற தலம்
- தேவாரப் பாடல் பெற்ற தலம் 274 தலங்களில் ஒன்று.
- காவிரி வடகரைத் தலங்களில் 9-வது தலம்.
- திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தல இறைவனைப் பாடியுள்ளனர்.
- தேவாரப் பெயர் திருச்சாய்க்காடு.
- சாயாவனப் புராணம் என்னும் தல புராணத்தை கவிராஜநாயகம் பிள்ளை இயற்றியுள்ளார்.
- ராமலிங்க வள்ளலார் திரு அருட்பாவில் பாடியுள்ளார்.
வில்லேந்திய வேலவர்
 |
| வில்லேந்திய வேலவர் - அசுர மயிலுடன் |
- முருகர் இத்தலத்தில் கையில் வில் மற்றும் அம்பு ஏந்திய கோலத்தில் நான்கு கைகளுடன் செப்புப் படிமமாக காட்சி தருகிறார்.
- ஆகமங்களின்படி முருகர் ஆறுமுகராக பன்னிரண்டு கைகளோடு விளங்கும்போதும் எட்டு கைகளை கொண்டிருக்கும் போதும் இடக்கை ஒன்றில் வில்லும் வலக்கை ஒன்றில் அம்பும் இருக்கலாம். ஆனால் இரண்டு, நான்கு, ஆறு கைகள் உடைய முருகர் படிமங்களில் வில்லையும் அம்பையும் ஆகமங்கள் பரிந்துரைப்பதில்லை. இங்கு நான்கு கை முருகர் வில் அம்பை ஏந்தி இருப்பது சிறப்பு.
- இவர் திருச்செந்தூர் கோயிலைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது. 1648-ஆம் ஆண்டில், டச்சுக்காரர்கள் இந்தச் சிலையைத் திருட்டுத்தனமாகக் கப்பலில் கொண்டு சென்றனர். அவர்களது கப்பல் கடலின் நடுவில் சிக்கிக்கொண்டதால், அவர்கள் பூம்புகார் அருகே முருகன் சிலையைக் கடலில் தவறவிட்டனர். பின் இந்த முருகர் சிலை பூம்புகார் கடற்கரையில் ஒரு மீனவரின் வலையில் சிக்கியது. கடலில் இருந்து கிடைத்ததால் இவரை "கடல் கொடுத்த சுடர்" என்றும் அழைக்கிறார்கள்.
- சிலையின் அடியில் "செந்தில் ஆண்டவர்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
- அவரது காலில் 'வீரகண்டமணி' என்ற தண்டையை அணிந்திருக்கிறார். சிவனால் அளிக்கப்பட்டது.
 |
| வேறொரு நாளில் (படம் நன்றி: அர்ஜுன வல்லபா) |
- வில் ஏந்திய நிலையில் இடது காலை முன்வைத்து, போருக்குச் செல்லும் வீரத் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். "சத்ரு சம்ஹார மூர்த்தி" என்று அழைக்கப்படுகிறார்.
 |
| கோபுரத்திற்கு வெளியே குளக்கரையில் அறிவிப்புப் பலகை |
மேலும் சிலத் தலங்களில் முருகர் வில்லுடன் காட்சி அளிக்கிறார். இது பற்றிய தனிப் பதிவு:
'வில்லேந்திய வேலவர்'
இயற்பகை நாயனார்
 |
| படம் நன்றி: Venkatraman Srinivasan via FB) |
- இயற்பகை நாயனார் பூம்புகார் நகரத்தில் வணிகர் குலத்தில் பிறந்தவர்.
- பக்தி: "சிவனடியார்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தானம் அளிப்பது" என்பதைத் தனது வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருந்தார். “இல்லையே எனாத இயற்பகைக்கு அடியேன்” - திருத்தொண்டர் தொகையில் சுந்தரர்.
- சோதனை: ஒருமுறை சிவபெருமான் ஒரு முதிய வேதியர் வடிவில் வந்து, "உன் மனைவியை எனக்குத் தானமாகத் தர வேண்டும்" என்று கேட்டார். சற்றும் தயங்காமல் நாயனார் தன் மனைவியைச் சம்மதிக்க வைத்து வேதியருடன் அனுப்பி வைத்தார்.
- போர்: அடியாரின் செயலைக் கண்டு கோபமடைந்த நாயனாரின் உறவினர்கள், வேதியரை வழிமறித்துப் போரிட்டனர். நாயனாரே வாள் ஏந்தித் தன் உறவினர்களை எதிர்த்துப் போரிட்டு, அடியாரையும் தன் மனைவியையும் சாயாவனம் வரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.
- முக்தி: சாயாவனம் எல்லையில் அடியார் மறைந்து சிவபெருமான் பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சியளித்தார். நாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன், அவருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்திலேயே முக்தியளித்தார்.
- தனிச் சன்னிதி: இக்கோயிலில் இயற்பகை நாயனார் மற்றும் அவரது மனைவிக்குத் தனிச் சன்னிதி உள்ளது.
- உற்சவம்: மார்கழி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று இயற்பகை நாயனார் முக்தி அடைந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று அவர் உறவினர்களுடன் போரிட்ட நிகழ்வு மற்றும் இறைவனின் காட்சி அளிப்பு போன்றவை விழாவாக நடத்தப்படும்.
 |
| (படம் நன்றி: giridhar_vilvanathan) |
வெளித்திருச்சுற்று
.jpg) |
உமை மகேசர், வழக்கமான சுகாசனத்தில் இல்லாமல் உத்குடிகாசனத்தில் உள்ளார். வலது கை ஒரு திண்டின் மேல். |
மாடக்கோயில் அமைப்பு: - கோச்செங்கட் சோழன் கட்டிய 78 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகிறது. உள் திருச்சுற்று வெளித் திருச்சுற்றில் இருந்து உயர்த்திக் கட்டப்பட்டிருப்பது காரணம். ஒன்பது படிகள் உயரம்.
 |
| (படம் நன்றி: பா. ஜம்புலிங்கம், via Wikipedia CC0 1.0) |
- ஆனால் இந்தக் கோயில் கோ. வேணிதேவி, இரா. கலைக்கோவன் ஆகியோரின் 'மலைக்கவைக்கும் மாடக்கோயில்கள்' நூலில் பட்டியலிடப்படவில்லை. அவர்கள் 'வெற்றுத்தளத்தின் மீது கட்டப்பெற்ற இறையகமே மாடக்கோயில்' என்று வரையறை செய்கின்றனர். இங்கு உயர்ந்த கீழ்ப்ப்குதி வெற்றுத் தளமாக அமையாமல் சுவரின் பகுதியாகவே உள்ளது.
- செங்கற்களால் கட்டப்பட்டிருந்த இக்கோயில், பிற்காலத்தில் சோழர் காலத்தில் கற்றளியாக மாற்றியமைக்கப்பட்டது.
கோயில் உள்ளே - முதல் திருச்சுற்று
கோரைப் புல் தல மரம்- சாயாவனம் கோயிலின் தல மரம் கோரைப் புல் (பைஞ்சாய்).
- கோயில் வளாகத்தில் உள்ள நந்தவனத்தில் இந்தக் கோரைப் புற்கள் வளர்க்கப்பட்டுத் தல விருட்சமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
- இக்கோரைப் புற்கள் மருத்துவக் குணங்கள் கொண்டவை என்றும், உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியவை என்றும் நம்பப்படுகிறது.
- 'சாய்' என்ற சொல்லுக்கு தண்டான்கோரை என்று பொருள் உண்டு. சாய் நிறைந்த வனமாக இருந்ததால் 'சாயாவனம்'. தேவாரத்தில் 'திருச்சாய்க்காடு'.
- 'சாயை' என்றால் நிழல் என்றும் பொருள் உண்டு. அடர்ந்த மரங்கள் நிறைந்து எப்போதும் நிழல் தரும் வனமாக இருந்ததாலும் 'சாயாவனம்'.
 |
| 1956 குடமுழுக்குச் செய்தி - அக்காலத் தமிழ் |
- இக்கோயிலில் 13 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன.
- மன்னர்கள்: இராஜராஜன், இராஜேந்திரன், விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன் முதலிய சோழர்கள், பாண்டிய மன்னன் சடாவர்மன் சுந்தர பாண்டியன்.
- கல்வெட்டுப் பெயர் - இராசாதிராச வளநாட்டு நாங்கூர் நாட்டு காவிரிப்பூம்பட்டினத்து திருச்சாய்க்காடு. விக்கிரம சோழனின் கல்வெட்டு இவ்வூரை "புகார் நகரம்" என்று குறிப்பிடுகிறது.
- இராஜராஜன்-II / III காலத்திய கல்வெட்டு, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, மன்னன் பெயரிலேயே இராஜராஜன் நந்தவனம் உருவாக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
- மன்னர்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் கோயிலுக்கு வழங்கிய நிலதானம், நெல், பொற்காசுகள் மற்றும் பசுக்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதில் உள்ளன.
- அன்னதானம்: மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, 50 பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்க நிலம் தானம் செய்யப்பட்டதைக் குறிப்பிடுகிறது.
- மடம்: "இராச நாராயணம்" என்ற பெயரில் ஒரு மடம் இக்கோயிலில் செயல்பட்டு வந்தது பற்றிய குறிப்புகளும் உள்ளன.
- காசிக்கு நிகரான ஆறு காவிரிக்கரை சிவத்தலங்களில் சாயாவனமும் ஒன்று. (மற்றவை: திருவையாறு, திருவெண்காடு, திருவாஞ்சியம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை)
- முக்தி அளிக்கும் தலம்: காசியில் இறப்பவர்களுக்குக் காதுகளில் சிவன் 'ராம' மந்திரத்தை ஓதி முக்தி அளிப்பது போலவே, சாயாவனத்திலும் சிவன் உயிர்களின் காதுகளில் பிரணவ மந்திரத்தை ஓதி முக்தி அளிப்பதாக நம்பிக்கை.
- புனித நீராடுதல்: இங்கு அருகில் உள்ள காவிரி ஆறு கடலோடு கலக்கும் சங்கமத்தில் நீராடுவது காசி கங்கையில் நீராடுவதற்கு இணையான புண்ணியத்தைத் தரும்.
- முன்னோர் வழிபாடு: காசியைப் போலவே இத்தலமும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும், தர்ப்பணம் செய்யவும் மிகவும் ஏற்ற இடமாகக் கருதப்படுகிறது.
தல புராணம்
- இந்திரனின் தாயார் அதிதி தினமும் நிலவுலகு வந்து சாயாவனேஸ்வரரை வழிபட்டு வந்தார். இதை அறிந்த இந்திரன் தன் தாயின் சிரமத்தைக் குறைக்க எண்ணினான்.
- ஐராவதத்தின் முயற்சி - இந்திரன் தனது வாகனமான ஐராவதம் மூலம், சாயாவனம் கோயிலைப் பெயர்த்து இந்திரலோகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றான். ஐராவதம் தனது தும்பிக்கையால் கோயிலைச் சுற்றி வளைத்து இழுக்கத் தொடங்கியது.
- குயிலினும் நன்மொழி - யானை இழுக்கும்போது கோயில் அதிரத் தொடங்கியது. அப்போது உமை, ஒரு குயிலைப் போல மிக இனிமையான குரலில் கூவினாள். அந்த மதுரமான குரலைக் கேட்டு ஐராவதம் அப்படியே மயங்கி நின்றது. இறைவனும் அங்கு தோன்றி இந்திரனுக்குக் காட்சி தந்து, கோயிலை அங்கேயே விட்டுவிடுமாறு ஆணையிட்டார். தேவி குயிலைப் போன்ற இனிமையான குரலில் பேசியதால், அவருக்கு "குயிலினும் நன்மொழியம்மை" (வடமொழியில் கோசகாம்பாள்) என்று பெயர் வந்தது.
- யானை இழுத்தபோது ஏற்பட்ட பள்ளமே இன்றும் கோயிலைச் சுற்றியுள்ள அகழி போன்ற அமைப்பு என்று நம்பப்படுகிறது.
- யானை இழுத்த தழும்புகள் சுயம்பு லிங்கத்தின் தலையில் காணப்படுவதாகக் கூறப்படுகிறது.
- ஐராவதம் தன் தந்தங்களால் தரையைக் குத்தியபோது உருவானது ஐராவதத் தீர்த்தம்
பஞ்சவன தலங்கள் 1 . சிதம்பரம் 2 . தென் திருமுல்லைவாசல் 3 . பல்லவனேஸ்வரம் 4 . திருவெண்காடு 5 . சாயாவனம் .
துணை
Comments
Post a Comment